கள்ளக்குறிச்சியில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்கேற்க வந்த தினக்கூலி தொழிலாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர் வருகைக்காக தியாகதுருகம் சாலையில் அமர்ந்திருக்கின்றனர். 
தமிழகம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள்: நடப்பு பணிகள் முற்றிலும் முடங்கின

ந.முருகவேல்

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலியால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் மந்தமடைந்துள்ளதாக கட்டுமான மேற்பார்வையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பாளர்களின் தீவிர பிரச்சாரத்தால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் தொகுதிகள் அனைத்தும் களை கட்டியுள்ளது.

ஆங்காங்கே பொதுக் கூட்டங்கள் நடைபெறு கின்றன. முக்கிய பிரமுகர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் தலைவர்களின் பிரச்சாரத்தின் போது ஆட்களைத் திரட்டி, கூட்டம் கூட்டி தங்களது பலத்தை காண்பிக்கவும்,தலைவர்களின் பிரச்சாரத்தின் போது கூட்டத்தைக் கூட்டுவது என்பது வேட்பாளர்களுக்கு அவசியமாகி விட்டது.

கரோனா பரவல் அதிகரித்து வருகிறது, எனவே பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்போர் எவரும் அவற்றை கடைபிடிப்பதாக தெரியவில்லை.

இதனிடையே கடந்த சில நாட்களாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் கிராமப்புற பகுதிகளில் விவசாயப் பணிகளுக்கும், கட்டுமானப் பணிகளுக்கும் வரும் ஆட்கள் குறைந்து விட்டதாகவும்,இதனால் தங்களது பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலைத் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதால், குறிப்பாக பெண்களை மையமாக வைத்து கிராமத்தில் இருந்து மக்களை அழைத்துச் சென்று விடுகின்றனர். ஒரு கூட்டத்திற்கு போனால் 200 மற்றும் சாப்பாடு கொடுத்து விடுகின்றனர்.

குறைந்தது 3 கூட்டங்களுக்குச் செல்வதன் மூலம் சாப்பாடுடன் ரூ.600 வரை கிடைப்பதால் அவர்கள் தினப்படி வேலைக்கு வருவதை தவிர்த்து விடுகின்றனர். இன்னும் 15 நாட்களுக்கு இதே நிலை தான் என்ற நிலை இந்த 3 மாவட்டங்களிலும் நிலவுகிறது. இதனால் பலர் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். வேளாண் பணிகளிலும் பெருமளவு தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்க கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் கூறுகையில், ”அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடையாக சிமெண்ட், கம்பி நிறுவனங்களிடம் பெரும்தொகையை பெற்று விட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் கட்டுமான மூலப்பொருட்களை விலையை உயர்த்தியுள்ளனர். இதனால்ஏற்கெனவே கட்டுமானப் பணி வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்குமிங்காக நடந்து வந்த சிறிய பணிகளும் தற்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என்ற பெயரில் முடங்கிப் போயிருக்கிறது” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

இதுபற்றி பிரச் சாரக் கூட்டத்திற்கு செல்வோரிடம் கேட்டால், “நாங்கள் விரும்பியே செல் கிறோம். உள்ளூர்காரர்கள் கூப்பிடுகின்றனர். அவர்களிடம் முடியாது என்று சொல்ல முடியவில்லை” என்கின்றனர்.

SCROLL FOR NEXT