பணமா, கொள்கையா என்றால் மக்கள் கொள்கைக்குத்தான் வாக்களிப்பார்கள், என திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி தெரிவித்தார்.
திண்டுக்கல் தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளர் என்.பாண்டி திண்டுக்கல் நகரில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டார். இவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, முன்னாள் நகராட்சி தலைவர் பஷீர்அகமது, திமுக நகர செயலாளர் ராஜப்பா, காங்கிரஸ் நகர தலைவர் மணிகண்டன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறேன். கடந்த ஐந்து ஆண்டு காலமாக திண்டுக்கல் தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்சியில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. திமுக ஆட்சியில் அப்போது அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொண்டு அடிக்கல் நாட்டினார். அடுத்து வந்த அதிமுக ஆட்சி கிடப்பில் போட்டது. தற்போது தொடங்கிவிட்டு தாங்கள் கொண்டுவந்தது என்கின்றனர்.
திண்டுக்கல்லில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க தொடர்ந்து போராடி வருகிறோம். அதிமுக அரசாங்கத்தால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. திண்டுக்கல் நகருக்கு கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈரோட்டிற்கு மாற்ற ஒப்புக்கொண்டார் அமைச்சர் சீனிவாசன். இதன்காரணமாக திண்டுக்கல்லின் வளர்ச்சி பத்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விட்டது. முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றபின் அமைச்சராக ஐ.பெரியசாமி பொறுப்பேற்கும்போது திண்டுக்கல் நகரில் கிடப்பில் போடப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுதற்கு நான் பாடுபடுவேன்.
இந்த தேர்தலில் அதிமுக தற்போது பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. அதிமுகவிற்கு போடும் ஓட்டு பாரதிய ஜனதா கட்சிக்கும், மோடிக்கும் போடும் ஓட்டு. வாக்களிக்கும் மக்களிடம் பணமா, கொள்கையா என்ற கேள்வியை எழுப்பினால் பணம் தேவையல்ல, கொள்கைதான் முக்கியம் என மக்கள் கொள்கைக்கு வாக்களிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.