விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர் தந்த வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள், சங்ககாலப் புலவர்கள் கம்பர், ஒக்கூர் மாசாத்தியார் வாழ்ந்த பூமி சிவகங்கை. இத்தொகுதியில் சொர்ண காளீஸ்வரர், வெட்டுடையாள் காளி, கண்ணுடைய நாயகி அம்மன் உள்ளிட்ட கோயில்கள், பாறை ஓவியங்கள், சமணர் படுக்கைகள் உள்ள திருமலை போன்றவை உள்ளன. மேலும் மாவட்டத் தலைநகராக இருப்பதாலும், இத்தொகுதி முக்கியத் துவம் பெறுகிறது.
இத்தொகுதியில் சிவகங்கை நகராட்சி, சிவகங்கை, காளையார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள், கல்லல், மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சிகள் உள்ளன.
இங்கு முக்குலத்தோர், யாதவர், முத்தரையர், உடையார், நகரத்தார், நாடார், உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். கடந்த ஜனவரியில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் நிலவரப்படி, வாக்காளர்கள் 2,99,118 பேர் உள்ளனர். இதில் 1,47,093 ஆண்கள், 1,52,021 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். இதுவரை இத்தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும், சுயேச்சை ஒருமுறையும் வென்றுள்ளன.
இத்தொகுதியில் ஸ்பைசஸ் பார்க் திறக்கப்படாதது, காளையார்கோவிலில் கலைக் கல்லூரி கொண்டு வராதது, காளையார்கோவில், கல்லலில் புதிய பேருந்து நிலையம் அமைக்காதது போன்ற குறைகள் கூறப்படுகின்றன. ஆனால், இத்தொகுதி அமைச்சரான ஜி.பாஸ்கரன், காவிரிக் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது, காவிரி உபரிநீரைக் கொண்டு வர காவிரி-வைகை-குண்டாறு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது போன்றவற்றை தனது சாதனைகளாக கூறி வருகிறார்.
அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான பி.ஆர்.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த எஸ்.குணசேகரன் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதுதவிர அமமுக சார்பில் அன்பரசன், நாம் தமிழர் சார்பில் மல்லிகா, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேசம் ஜோசப் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.
அதிமுக வேட்பாளர் ஏற்கெனவே சிவகங்கை எம்பியாக இருந்தவர். ஆளும் அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி, மகளிர் கடன் தள்ளுபடி, 10 ஆண்டுகால நலத்திட்ட உதவிகள் தேர்தல் அறிக்கை போன்றவை சாதகமாக இருந்தபோதிலும் அமைச்சர் பாஸ்கரனின் ஆதரவாளர்கள் அதிருப்தி, வெளியூர்காரர் என்ற குற்றச்சாட்டு, அமமுக வாக்குகளை பிரிப்பது போன்ற அம்சங்கள் பாதகமாக உள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எளிய மக்களுக்காக போராடக்கூடியவர், எளிதில் சந்தித்து குறைகளைத் தெரிவிக்கலாம் என்பது பலம் என்றாலும், சீட் கிடைக்காதததால் திமுகவினர் அதிருப்தியில் இருப்பது, சொந்தக் கட்சியை சேர்ந்தவரே போட்டி வேட்பாளராக களமிறங்கியது போன்றவை பாதகமாக உள்ளன. இதுதவிர மற்ற வேட்பாளர்களுக்கு பெரிய கட்சிகளின் கூட்டணி இல்லாதது பாதகமான அம்சமாக உள்ளது.
வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
சிவகங்கை பகுதியில் நூற்பாலைகள் முடங்கியதால் பலரும் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்லும் நிலை உள்ளது. மூடிக்கிடக்கும் கிராபைட் தொழிற்சாலையை திறந்து அதிகளவில் உப தொழில்களை ஏற்படுத்த வேண்டும். சிவகங்கையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கல்லல், காளையார்கோவிலில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். காளையார்கோவிலில் கலைக் கல்லூரி, சிவகங்கையில் சட்டக்கல்லூரி தொடங்குவது, பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.