‘‘சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியில் விவசாயிகளுக்காக போராடி பயிர் காப்பீடு இழப்பீடு பெற்று தந்துள்ளேன்,’’ என சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.குணசேகரன் தெரிவித்தார்.
காளையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி கட்சிக ளின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக மாநில இலக்கிய அணி அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தென்னவன் பேசுகை யில், ‘‘ காய்கறி விலை காட்டுத்தீயாக உயர்ந்து விட்டது. அதபோல் பெட்ரோல் விலையும் அதிகரிப்பதால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி விட்டது,’’ என்று பேசினார்.
கார்த்திசிதம்பரம் எம்பி பேசுகையில், ‘‘தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது பாஜகவின் பினாமி அரசு. மத்திய அரசு நாட்டு மக்களை காப்பாற்ற தவறிவிட்டது. மேலும் வேலைவாய்ப்பு தருகிறோம் என்று கூறிவிட்டு, பல கோடி பேரின் வேலையை பறித்துவிட்டனர்.
தேர்தல் முடிந்த மறுநாளே பெட்ரோல் விலை உயரும். விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் சிரமப்படுகின்றனர். ஆட்சியாளர்கள் மட்டுமே வாங்கி சாப்பிட கூடிய நிலையே உள்ளது,’’ என்று பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன் பேசுகையில், ‘‘ நான் 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தபோது குடிநீர் திட்டம், சாலை வசதி கொண்டு வந்துள்ளேன். மேலும் விவசாயிகளுக்காக போராடி பயிர் காப்பீடு இழப்பீடு பெற்று கொடுத்துள்ளேன். மக்கள் பிரச்சினைக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளேன். என்னை எளிதில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். ஆனால் அதிமுக வேட்பாளரோ வெளியூரைச் சேர்ந்தவர், என்று பேசினார்.