ராமேசுவரம் அருகே அரியமான் கடற்கரையில் வரையப்பட்ட மணல் சிற்பங்கள். படம்: எல். பாலச்சந்தர். 
தமிழகம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அரியமான் கடற்கரையை அலங்கரித்த மணல் ஓவியங்கள்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை பொதுத் தேர்தல்-2021-ஐ முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ‘கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்றல், முதன் முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு வாக்காளர்களையும் தேர்தல் நடவடிக்கைகளில் ஊக்குவித்தல், 100 சதவித வாக்குப்பதிவு, நேர்மையாக வாக்களித்தல்' உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் வரும் சுற்றுலா இடமான ராமேசுவரம் அருகே உள்ள அரியமான் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சித் துறையின் ஒருங்கிணைப்பில் கலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் ஆசிரியராகப் பணிபுரியும் பா.சரவணன் என்பவர் இம்மணல் சிற்பங்களை அமைத்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு, முகக்கவசம் அணிந்து வாக்களிப்போம், சி-விஜில் செயலி பயன்பாடு, பாம்பன் ரயில் பாலம் ஆகிய வடிவங்களில் மணல் சிற்பங்கள் அமைந்திருந்தன.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார். மேலும், அரியமான் கடற்கரைக்கு வந்திருந்த இளைஞர்களும் மணல் சிற்பங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு ரசித்தனர்.

இந்நிகழ்வின் போது, கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி உட்பட அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT