கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுகவேட்பாளர் தளவாய் சுந்தரம்ஆகியோர் நேற்று ஈத்தாமொழி சந்திப்பில் இருந்து மீனவ கிராமங் களில் பிரச்சாரத்தை தொடங்கினர்.
அப்போது, பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஏற்கெனவே இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்றால் புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதுடன், கிடப்பில் கிடக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதன் மூலம்படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குமரி மாவட்டம் பெரும் வளர்ச்சி அடையும்.
குமரியில் நான்குவழிச்சாலை கொண்டு வரக்கூடாது என்றார்கள். இரட்டை ரயில்பாதை வேண்டாம் என்றார்கள். தற்போது இத்திட்டங்கள் நடக்கும் பகுதியில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஒவ்வொரு நலத்திட்டங்கள் வரும்போதெல்லாம் `ஒட்டுமொத்த மாவட்டமே அழிந்துவிடும்’ என்ற பொய்யான பிரச்சாரத்தை பரப்பினர். தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை 104 கோடி ரூபாய் திட்டத்தை இல்லாமலாக்கி விட்டனர். தென்னை ஆராய்ச்சி மையம் ஏறக்குறைய 10 ஏக்கர் நிலத்தில் கொண்டுவர இருந்தோம். அதையும் இல்லாமல் ஆக்கி விட்டனர்.
மதியம் உணவுவேளையின்போது, `இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:
துறைமுக திட்டத்தில் திமுகவும், காங்கிரஸும் திட்டமிட்டுமக்கள் மத்தியில் குழப்பத்தைஏற்படுத்தி உள்ளன. சரக்கு பெட்டகமுனைய துறைமுகத் திட்டத்தைதூத்துக்குடியில் ரூ. 3 ஆயிரம்கோடியில் பணிகளை தொடங்குவதற்கு பிரதமர் மோடி ஆணையிட்டுள்ளார். அப்படி இருக்கையில், குமரியில் இதைப்பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? இதை அரசியலாக்கியுள்ளனர்.
மீனவ சகோதரர்கள் தைரியமாகநம்பி உங்கள் வாக்குகளை பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தாருங்கள். மீனவர்கள் விரும்பும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். உங்களுக்கு விருப்பமில்லாத எதுவும் நடக்காது என்பதை உறுதியாக கூறுகிறேன்” என்றார் அவர்.