‘‘ஊழலில் ஊறிப்போன காங்கிரஸ், திமுக கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது,’’ என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் செல்வராஜ், காரைக்குடி தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது:
தமிழகத்தில் இந்தத் தேர்தல் சரித்திரத்தில் முக்கியமான தேர்தல். பாஜக மக்களை மையமாக வைத்து ஆட்சி நடத்தி வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினர். அவரைத் தொடர்ந்து பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.
மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. கடந்த 2014-க்கு முன்பு தினமும் ஊழல் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள். அப்போது கொள்கை இல்லாத ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
மோடி அரசு ஆறரை ஆண்டுகளில் நூறாண்டுகள் பேசும் சாதனைகளை செய்துள்ளது. மத்திய அரசு அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்காக பாடுபடுகிறது.
ஏழை விவசாயிகளுக்காக தினமும் சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும். அதற்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
முன்னேற்றம் தொடர வேண்டுமென்றால் மத்திய அரசுடன் இனக்கமான அதிமுக ஆட்சி தொடர வேண்டும். வெளிநாடுகளில் ஏதாவது பிரச்சனை என்றால் நமது நாடு குரல் கொடுக்கும். அதனால் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தங்களுக்கென்று ஒரு அரசு இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது.ஊழலில் ஊறிப்போன கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. காங்கிரஸ் - திமுக ஆட்சியில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கவலைப்பட்டது கிடையாது. முதலைக் கண்ணீர் தான் வடித்துக் கொண்டிருந்தனர், என்று பேசினார்.