தமிழகம்

கமல் அரசியலில் சாதித்தது என்ன?: வானதி சீனிவாசன் கேள்வி

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்குத் தொகுதிக்காக இதற்கு முன் என்ன செய்திருக்கிறார்? இல்லை அரசியலில்தான் என்ன செய்திருக்கிறார் என்று வினவியுள்ளார் அத்தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி, தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

அங்கு கமல்ஹாசன் மக்களுடன் வாக்கிங் தொடங்கி மக்களுக்காக சிலம்பாட்டம் வரை செய்துகாட்டி வாக்கு சேகரித்து வருகிறார். வானதியும் ஆட்டோ பயணம் என்று புதிய உத்தியில் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு களத்தில் ஆதரவு பெருகியிருக்கிறதோ என்றளவில் செய்திகளும், பேச்சுக்களும் உலாவர கமல் என்னதான் சாதித்துவிட்டார் எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “கோவையைப் பொறுத்தவரை இது இரு ஸ்மார்ட் சிட்டி. கடந்த இரண்டு வருடங்களாகவே இங்கு பல மேம்பாட்டுத் திட்டங்கள் வந்துள்ளன.

கூட்டணிக் கட்சிகள் நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றன. தோற்றால் கூட என் தொகுதி மக்களுடன் நிற்பேன் என்ற வேட்பாளராக நான் இருக்கிறேன்.

ஆனால் கமலோ ஊழலை எதிர்க்கிறேன் என்று இத்தொகுதியில் வந்து நிற்கிறார். கோவை தெற்கு தொகுதிக்காக கமல் இதற்கு முன்னர் என்ன செய்திருக்கிறார். அரசியலில்தான் கமல் என்ன செய்திருக்கிறார். இங்கு வந்து கமல் சூட்டிங்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதி தான் மோசமான அரசியல்வாதிகளால் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அந்தத் தொகுதியில் நேரடியாக களம் இறங்க வேண்டும் என்று நினைத்தேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT