மதுரை அருகே திருமங்கலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஸ்டாலினுக்குப் போட்டியாக அதிமுக புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஒரே பகுதியில் அதிமுக, திமுகவினர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மற்றும் அதன் கூட்டணிg கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.
அக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்டம் முழுவதும் இருந்து திமுகவினர் திருமங்கலத்தில் திரண்டிருந்தனர். அதேநேரத்தில் ஸ்டாலினின் இந்த திமுக பிரச்சாரக் கூட்டத்திற்கு போட்டியாக அதே திருமங்கலம் தொகுதியில் உள்ள திருமங்கலம் சிவரக்கோட்டையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பங்கேற்ற பிரச்சாரம் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க அதிமுகவினர் மாவட்டம் முழுவதும் இருந்து திரண்டிருந்தனர்.
சிவரக்கோட்டையில் நடந்த அதிமுக கூட்ட வேட்பாளர்கள் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணன், மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.சரவணன், மேலூர் தொகுதி வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம், உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் அய்யப்பன், மதுரை மத்தி தொகுதி வேட்பாளர் ஜோதிமுத்துராமலிங்கம், திருச்சூழி தொகுதி வேட்பாளர் ராஜசேகர், சோழவந்தான் தொகுதி வேட்பாளர் மாணிக்கம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது;
மத்திய அரசில் திமுக 17 ஆண்டுகள் அங்கம் வகித்தது. ஆனால், எந்தத் திட்டத்தையும் தமிழக மக்களுக்கு பெற்றுத் தரவில்லை. ஆனால், மத்திய அமைச்சரவையில் இடம்பெறாமலேயே மத்திய அரசிடம் பேசி மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை முதலமைச்சர் பெற்றுத் தந்துள்ளார்.
கரோனா காலத்தில் உயிருக்குப் பயந்து ஸ்டாலின் நான்கு சுவற்றிற்குள் உட்கார்ந்து கொண்டு தற்போது ஓட்டுக்காக மக்களை சந்திக்க வருகிறார். ஆனால், கரோனா தொற்று காலத்திலும் உங்களுடன் இருந்து நிவாரண உதவிகள் வழங்கினோம்.
அப்படி உங்களில் ஒருவராக இருந்து கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவிலேயே கரோனா ஒழிப்பில் முதல் மாநிலமாக தமிழகத்தை திகழவைத்த அதிமுகவுக்கு மீண்டும் மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.