ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் என்.ஓ.சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை. 
தமிழகம்

ராமநாதபுரத்தில் 81 மனுக்கள் ஏற்பு: சுயேச்சைகள் உள்ளிட்ட 51 மனுக்கள் நிராகரிப்பு

கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் 132 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், பரிசீலனையில் 81 மனுக்கள் ஏற்கப்பட்டு 51 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, பரமக்குடி(தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதிகளுக்கு 7 இடங்களில் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

தொகுதி வாரியாக திருவாடானையில் 32 மனுக்கள், பரமக்குடியில் 24 மனுக்கள், ராமநாதபுரத்தில் 38, முதுகுளத்தூரில் 38 என மொத்தம் 132 மனுக்கள் வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்டன.

அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணியிலிருந்து மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், அவர்களது ஏஜெண்டுகள் மனுக்கள்பரிசீலனையில் கலந்து கொண்டனர்.

பரிசீலனையில் திருவாடானையில் 32 மனுக்களில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பரமக்குடியில் 24 மனுக்களில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டு,9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ராமநாதபுரத்தில் 38 மனுக்களில் 23 ஏற்கப்பட்டு 15 நிராகரிக்கப்பட்டன.

முதுகுளத்தூரில் 38 மனுக்களில் 25 ஏற்கப்பட்டு, 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மனுக்கள் பரிசீலனை இன்று நிறைவடைந்த நிலையில்,வரும் 22-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசிநாளாகும். அன்று மாலையே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

அதனையடுத்து ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவும், வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT