புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை அரசு தூர் வாராததால் வறட்சிக்குள்ளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மழைக் காலங்களில் பெய்யும் நீரை புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கிலித் தொடர்போல உள்ள 6,001 ஏரிகள், கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தேக்கிவைத்து சுமார் 7.33 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
அதில், பொதுப்பணித் துறையினரின் கண்காணிப்பில் உள்ள 1,019 ஏரிகள், கண்மாய்களில், 168 ஏரிகள் மற்றும் கண்மாய்களில் மட்டும் கல்லணைக் கால்வாய் மூலம் காவிரி நீர் தேக்கி வைக்கப்பட்டு சுமார் 21,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதுதவிர, சுமார் 4,942 குளங்கள் ஊராட்சி நிர்வாகத்தில் உள்ளன. சுமார் 40 குளங்கள் பல்வேறு தேவைகளுக்காக தூர்க்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் 288 மில்லிமீட்டர், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 501 மில்லிமீட்டர் உட்பட ஆண்டுக்கு சராசரியாக 925 மில்லிமீட்டர் மழை பெய்யும்.
அதில், கடந்த 2003-ம் ஆண்டில் 764 மில்லிமீட்டரும், 2004-ல் 1,123, 2005-ல் 1,260, 2006-ல் 821, 2007-ல் 890, 2008-ல் 1,135, 2009-ல் 854, 2010-ல் 998, 2011-ல் 969, 2012-ல் 639, 2013-ல் 565, 2014-ல் 751, 2015-ல் இதுவரை சுமார் 700 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு பெய்த மழை நீரையும் முறையாகத் தேக்கி வைப்பதற்கேற்ப நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களைத் தூர் வாராததால் மழைநீர் காட்டாறுகள் மூலம் கடலில் கலந்துவிடுகிறது.
இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 100 அடியில் ஆழத்தில் கிடைத்த நீர் தற்போது 800 அடியில்தான் கிடைக்கும் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
இதன் மூலம் குடிநீர் பற்றாக்குறையால் போராட்டம் உள்ளிட்டவைகள் மூலம் குடிநீர் விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறிவிடுகிறது. இதற்கு அரசின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சியைக் கட்டுப்படுத்த அரசு சிறப்பு நிதி ஒதுக்கி நீர்நிலைகளைத் தூர் வார வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஜி.எஸ். தனபதி கூறும்போது, “மாநிலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் மாவட்டத்தில் அதிகளவில் குளங்கள் இருந்தும் அதை அரசு தூர் வாராததே வறட்சிக்கு காரணம். எனவே, நில ஆவணங்களில் உள்ளதைப்போல அனைத்து நீர்நிலைகளையும் எல்லை வரையறை செய்து அரசு சிறப்பு நிதி ஒதுக்கி தூர் வார வேண்டும். நீர்வளத்தைக் கெடுக்கும் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். மேலும், வனத்தோட்டக் கழகத்தால் பயிரிடப்பட்டுள்ள தைல மரங்களையும் அகற்ற வேண்டும்” என்றார்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மு.மாதவன் கூறும்போது, “அரசு அறிவித்தபடி கொள்ளிடம் உபரி நீர் திட்டம் மற்றும் ரூ.5,500 கோடியிலான காவிரி- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காட்டாறுகளைத் தூர் வாருவதுடன் அணைக்கட்டுகளையும் சீரமைக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து தெற்கு வெள்ளாறு அலுவலர்களிடம் கேட்டபோது, “கடந்த 10 ஆண்டுகளாக குளம், கண்மாய்களைத் தூர் வார அரசு நிதி ஒதுக்கவில்லை. நிதி கிடைத்ததும் தூர் வாரப்படும்” என்றனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டபோது, “நிதி ஒதுக்கி குளங்களின் கரைகள் பலப்படுத்தப்படுகின்றன. மேலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் குளங்கள் தூர் வாரப்படுகின்றன” என்றனர்.