தமிழகம்

ராசிபுரம் திமுக வேட்பாளர் உரிய ஆவணம் வழங்கியபின் வேட்பு மனு ஏற்பு

கி.பார்த்திபன்

ராசிபுரம் திமுக வேட்பாளரின் மனு திடீரென நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் தரப்பில் உரிய ஆவணம் வழங்கப்பட்டபின் மனு ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ம.மதிவேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 23 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான 19-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 10 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் மதிவேந்தனுக்கு நாமக்கல், ராசிபுரம் ஆகிய இரு இடங்களில் ஓட்டு உள்ளது. எனவே, அவரது மனுவை நிராகரிப்பு செய்ய வேண்டும், என சுயேச்சைகள் சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் மதிவேந்தன் மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வேட்பாளர் மதிவேந்தன் தரப்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ''கடந்த டிசம்பர் மாதமே நாமக்கல்லில் உள்ள வாக்கை நீக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றும் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள், திமுக வேட்பாளரின் மனுவை ஏற்றனர். இச்சம்பவத்தால் ராசிபுரம் திமுகவினர் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT