தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்துதான் நடக்கும்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

என்.முருகவேல்

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்னைப் பார்த்துப் போலி விவசாயி என அவதூறாகப் பேசி வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.செந்தில்குமாருக்கு வாக்குச் சேகரிப்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி வந்தார்.

பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

''அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். எனது தாத்தா, தந்தை என எனது குடும்பம் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகிறது. ஆனால், நான் போலி விவசாயி என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவதூறு பேசுகிறார். விவசாயிகளில் போலி விவசாயி என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இவர்தான் போலி விவசாயி என்பதைக் கண்டுபிடித்துள்ளார். விவசாயிகளில் ஏது உண்மை விவசாயி, போலி விவசாயி? இதன்மூலம் விவசாயிகளைக் கொச்சைப்படுத்துகிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தவர். இவர் பதவியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. ஆனால், தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சரைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார். இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சித் துறை தமிழக உள்ளாட்சித் துறை. மத்திய அரசிடம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளாட்சித் துறையில் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் என எதற்கெடுத்தாலும் வாய்க்கு வந்தபடி ஊழல், ஊழல் எனப் பேசி வருகிறார்.

திமுகதான் ஊழல் கட்சி. ஊழலின் பிறப்பிடமே அங்குதான் உள்ளது. பச்சைப் பொய் சொல்லும் ஸ்டாலின் எப்படியாவது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஆட்சிக்கு வரத் துடிக்கிறார். திமுக என்றாலே ரவுடிக் கட்சி, அராஜகக் கட்சி என்று பெயர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்துதான் நடக்கும். ஸ்டாலின் கட்டப் பஞ்சாயத்துத் தலைவர். ஆட்சியில் அவர்கள் அமரப் போவதில்ல்லை. ஆனால், அவர் இப்போதே காவல்துறையினரை மிரட்டி வருகிறார்.

காவல்துறையினர் சட்டப்படியான பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்களை ஆட்சியில் அமர விடலாமா? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா! எனவே மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT