புதுச்சேரியில் மாமனார் ரங்கசாமியின் காலில் விழுந்து மருமகன் நமச்சிவாயம் ஆசி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்துக்கு வர அழைப்பும் விடுத்துள்ளார்.
காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். அவர் முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கூட்டணியில் நீடிப்பாரா என்ற கருத்து நிலவியது.
ஒரு கட்டத்தில் மாமனாரா? மருமகனா? என்ற போட்டிகூட நிலவியது. இதனிடையே கூட்டணியில் அங்கம் வகிக்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார். என்ஆர்.காங்கிரஸுக்குத் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டன.
அடுத்தகட்டமாக என்ஆர்.காங்கிரஸ் தொடர்ந்து வென்று வரும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட நமச்சிவாயம் விரும்பினார். வெல்லும் தொகுதியை என்ஆர்.காங்கிரஸ் விட்டுத்தருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அத்தொகுதியை பாஜகவுக்கு என்ஆர்.காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது. இதனால் பாஜக சார்பில் நமச்சிவாயம் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று நமச்சிவாயம், தனது மாமனார் ரங்கசாமியைச் சந்திக்க அவரின் வீட்டுக்குச் சென்றார். கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயில் வளாகத்தில் உள்ள வீட்டில் ரங்கசாமியைச் சந்தித்த நமச்சிவாயம், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். நமச்சிவாயத்துக்கு சால்வை அணிவித்து ரங்கசாமி ஆசி வழங்கினார்.
தனது வெற்றிக்கும், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெற்றிக்கும் ரங்கசாமி தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும்படியும் நமச்சிவாயம் அழைப்பு விடுத்தார். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே "மாமாவா? மாப்பிள்ளையா?" என விவாதம் நடந்துகொண்டிருந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.