தமிழகம்

ராசிபுரம் திமுக வேட்பாளர் மனு நிறுத்தி வைப்பு: கட்சியினரிடையே பரபரப்பு 

கி.பார்த்திபன்

ராசிபுரம் திமுக வேட்பாளரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொகுதிக்குட்பட்ட திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ம.மதிவேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவர் போட்டியிட நேற்று (மார்ச் 19) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அம்மனு மீது இன்று பரிசீலனை நடைபெற்றது. இதில் அவரது மனு ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணமாக நாமக்கல், ராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளில் அவருக்கு ஓட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே அவரது வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். எனினும் ஏற்கெனவே நாமக்கல் தொகுதியில் உள்ள வாக்கை ரத்து செய்யும்படி மனு அளித்திருப்பதாக வேட்பாளர் மதிவேந்தன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் சமூக நலத்துறை அமைச்சர் அமைச்சர் வி.சரோஜாவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதானக் கட்சியான திமுக வேட்பாளரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT