கரோனா பரவலைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். தடுப்பூசி போட மக்கள் முன்வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, இதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் அரசு செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசும்போது, “ சென்னையில் கூட்ட நெரிசல் இல்லாத பிற பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி முகாம் விரிவுபடுத்தப்படும். வாரந்தோறும் இந்த முகாம் நடத்தப்படும். இன்றைய தினம் சுமார் 30,000 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்த உள்ளோம்.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 60,000 பேருக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தும் திறன் உள்ளது. முகாமை விரிவுபடுத்தும்போது கூடுதலாக மக்கள் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வார்கள். எனவே, 45 வயதைக் கடந்த அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொண்டால் கரோனாவுக்கு விரைவாக முற்றுபுள்ளி வைக்க முடியும்.
இன்று முதல் 45 நாட்களுக்குள் 25 லட்சம் முதல் 30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடுவதுதான் சென்னை மாநகராட்சியின் இலக்கு. சென்னையின் மொத்த மக்கள்தொகையில் 42% பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். ஆனால், நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தடுப்பூசிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏழை, எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. இஸ்ரேலில் 98% கரோனா தொற்றே இல்லாமல் ஆகிவிட்டது. அங்கு 54% பேருக்கு கரோன தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா ஆகிவையும் இதனைத்தான் பின்பற்றுகின்றன. இவ்வாறு இருக்கும்போது நம்மாலும் முடியும். நாமும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தலாம். தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தினாலே போதும்” என்றார்.