தமிழகம்

கோவை பூ மார்க்கெட் பகுதிகளில் நடந்து சென்று வாக்குச் சேகரித்த கமல்; மக்களுடன் தேநீர் அருந்தினார்

டி.ஜி.ரகுபதி

கோவையில் இன்று (20-ம் தேதி) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பூ மார்க்கெட், அதற்கு அருகேயுள்ள பகுதிகளில் நடந்து சென்று பிரச்சாரம் செய்தார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் தங்கி தனது பிரச்சார நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், இன்று காலை (20-ம் தேதி) வழக்கம்போல் கோவை தெற்கு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்கு உட்பட்ட பூ மார்க்கெட், அதற்கு அருகேயுள்ள பகுதிகள், ஆர்.எஸ்.புரம், காந்தி பார்க் மற்றும் அதற்கு அருகேயுள்ள பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் கமல்ஹாசன் வாக்குச் சேகரித்தார்.

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும், தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கமல்ஹாசன் பொதுமக்களிடம் தெரிவித்து ஆதரவு திரட்டினார்.

பின்னர், தேநீர்க் கடையில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் சாப்பிட்ட கமல்ஹாசன், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை, கமல்ஹாசனிடம் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.

அதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்ளவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். சிலர் கமலைப் பின்தொடர்ந்து சென்று, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

SCROLL FOR NEXT