தடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாட்டியாலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் வீழ்த்தி கவனம் பெற்றார். நேற்று முன்தினம் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்தார்.
இந்தச் சாதனையைப் படைத்திருக்கும் 22 வயதான தனலட்சுமி திருச்சியைச் சேர்ந்தவர். அவருக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 20) தன் ட்விட்டர் பக்கத்தில், "விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம்!
தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துகள்.
மின்னலென ஓடும் அவரது சாதனைச் சிறகுகள், அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.