தமிழகம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபரை தேர்தலில் பங்கேற்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மக்கள் பிரதிநிதி ஆவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபரை தேர்தலில் பங்கேற்க அனுமதித்தால் அது தேர்தலையே பயனற்றதாக்கிவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு சட்டமப்பேரவை பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முனைவர் சே.பா. முகம்மது கடாஃபி, தேர்தல் செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அவரை மூன்று ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முகம்மது கடாஃபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு இடையூறாக இருப்பதால் தேர்தல் ஆணைய உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்”. எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, தனக்கு எம்எல்ஏவாக பதவி வகிக்கவே தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, போட்டியிட அல்ல, இந்த உத்தரவு காரணமாக துறைமுகம் தொகுதியில் எனது வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்பதால் தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்”. என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தும் மனுதாரர் எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தார்.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபரை தேர்தலில் பங்கேற்க அனுமதித்தால் அது தேர்தலையே பயனற்றதாக்கி விடும்”. எனக் கூறி, தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர்.

தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 2 வாரத்தில் தேர்தல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்யவும் , அதை நான்கு வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

SCROLL FOR NEXT