சினிமா படப்பிடிப்பு இடங்களை விட விசாரணை ஆணையத்தில் போதுமான பாதுகாப்பு உள்ளது என தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து 100 வது நாள் 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டு அதனைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்று அமைத்து இருந்தது.
இந்த ஆணையம் இதுவரை 26 கட்டங்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் பத்திரிக்கையாளர்கள் அரசுத் துறையை சார்ந்தவர்கள் 668 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது.
26 வது கட்ட விசாரணை கடந்த 15ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடந்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறுகையில், "இதுவரை மொத்தம் 668 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வந்து 45 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு. அதில் இதுவரை 27 பேர் சாட்சி கூறியுள்ளதாக கூறிய அவர், 1116 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் தேர்தல் முடிந்த பின் நடைபெறும். துப்பாக்கிச் சூடு சம்பவ தினத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள், போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும். ஏற்கெனவே அனுப்பிய சம்மனுக்கு அவர் பாதுகாப்பு காரணமாக ஆஜராகவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால் தற்போது அவர் அண்ணாத்த சினிமா பட படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சினிமா படப்பிடிப்பு இடங்களை விட இந்த ஆணையத்தின் போதுமான பாதுகாப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்