முதியோருக்கு ரூ.3,000 ஒய்வூதியம், பஞ்சமி நிலம் மீட்பு, அனைவருக்கும் வீடு, முதல்வர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்களின் சொத்து விவரம் ஆண்டுதோறும் வெளியீடு போன்ற அம்சங்கள் மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், நதிநீர் இணைப்பு திட்டங்களை துரிதப்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்படும். நீட் தேர்வு ரத்து செய்யவும் வலியுறுத்துவோம்.
நில உச்சவரம்பு சட்டத்தை அமலாக்கி உபரிநிலத்தை நிலமற்றோருக்கு விநியோகம் செய்வது, பஞ்சமி நிலங்களை கையகப்படுத்தி தலித் மக்களுக்கு ஒப்படைக்கப்படும். முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் வெளியிடப்படும். 60 வயது கடந்த அனைத்து முதியோர்களுக்கும் மாதம் ரூ.3000 ஓய்வூதியமும், ஊராட்சி தலைவர்களுக்கு மாத ஊதியம் தரவும் வலியுறுத்துவோம். அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சை, அனைவருக்கும் வீடு என்ற நிலை அரசின் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை
அதன்பின் நிருபர்களிடம் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘பாஜக-அதிமுகவை வீழ்த்துவது என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம். கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே நிலைப்பாட்டுடன் இருக்க முடியாது. மாறுபட்ட அணுகுமுறைகள் இருக்கும். படிப்படியாக கடைகளை மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் 3 தலைமுறைக்கும் மேல் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தர வேண்டும். தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.