முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயில் தேரோட்டம் 62 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ளது சுவாமிமலை முருகன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகைத் திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும். இதையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து மூலவருக்கு தங்கக் கவசம், வைரவேல் சாத்தப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
இக்கோயிலில் இருந்த பழமை யான தேர் 60 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்துவிட்டது. தற்போது ரூ.35 லட்சம் செலவில், 15 அடி நீளம், 15 அடி அகலம், 60 அடி உயரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தேரில், 62 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.