வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான வாக்காளர்கள் கட்சி மற்றும் சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
வேட்பாளர் யார், அவர் எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை பிரித்துப் பார்த்து வாக்களிப்பதில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 14 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். இதேபோல அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 12 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவுப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில், அந்தக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே போட்டியிட முடியும். கூட்டணி கட்சியாக இருந்தாலும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த சின்னத்தில் போட்டியிட முடியாது. இது சட்டவிரோதம்.
எனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களை, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.