ஆவடி அதிமுக வேட்பாளரான தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் நேற்று வாக்குறுதி கையேட்டை வெளியிட்டார்.
ஆவடி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருப்பவர், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன். இவர் மீண்டும் இதே தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார்.
இந்நிலையில், ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதி கையேடு மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் ஆவடி தொகுதியில் மேற்கொண்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்த கையேடு ஆகியவற்றின் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை முன்னாள் அமைச்சர் அப்துல்ரஹீம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆவடி தொகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்போர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் பாண்டியராஜன் கையேட்டை வெளியிட்டார். 15 பக்கங்கள் கொண்ட வாக்குறுதி கையேட்டில், தேர்தல் முடிந்து 100 நாட்களில் நிறைவேற்றப்பட உள்ள பணிகள், புதிய கட்டமைப்பு, நீர் மேலாண்மை, ஆவடி மாநகராட்சி, ரயில் சேவை, பட்டா, கல்வி, விளையாட்டு, சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட 20 தலைப்புகளின் கீழ், 83 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வாக்குறுதிகளில், 5 மேம்பால பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும், ஆவடி மாநகராட்சியில் 32,703 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும், பருத்திப்பட்டு ஏரியில் இளைஞர்களுக்காக நீர் விளையாட்டு தொடங்கப்படும்,
ஆவடியிலிருந்து, திருப்பதிக்கு நேரடி பஸ் வசதி செய்யப்படும், ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் ரூ.43 கோடி மதிப்பில் புதிய சாலைப் பணிகள் முடிக்கப்படும் உள்ளிட்ட 14 வாக்குறுதிகளை தேர்தல் முடிந்து, 100 நாட்களில் முடிப்பதாக பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆவடி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, தாலுக்கா நீதிமன்றம் அமைக்கப்படும், ரூ.100 கோடி மதிப்பில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகாமல் இருக்கவும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும் ஆவடி பகுதியில் உள்ள முக்கிய 6 ஏரிகளை இணைத்து தொகுதியின் நீர் வளம் பாதுகாக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் கையேட்டில் இடம்பெற்றுள்ளன.