நகர்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
உத்திரமேரூர் அருகே சாலவாக்கம் கிராமத்தில் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் க.சுந்தரை ஆதரித்து அவர் பேசியது:
மக்கள் சபை கூட்டம்
தமிழகத்தில் ஜனவரி 26, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. ஆனால், ஸ்டாலின் மக்கள் சபை கூட்டங்களை நடத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டார். அவர் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய துறைளுக்கான சிறந்த தொலைநோக்கு திட்டங்களை வகுத்து வைத்துள்ளார்.
முன்மாதிரி பள்ளி
திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தனிநபர் வருமானம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். அனைத்து ஊராட்சிகளிலும் முன்மாதிரி பள்ளிகள், முன்மாதிரி மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும். நகர்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு 20 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.