வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக உறுப்பினர் இருந்தாலும் ரூ.1,000 கோடியில் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ஆர்.கே.அப்புவை ஆதரித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘வேலூர் தொகுதியில் ஒரு இளைஞரை அதிமுக இங்கு வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளது. வேலூர் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம். 2010 வரை திமுக, காங்கிரஸ் கூட்டணியில் வேலூர் இருந்தது. 2011-ம் ஆண்டில் அதிமுக வெற்றி பெற்றது. 2016 கூட்டணி கட்சிக்கு கொடுக்கப்பட்டது. 2021-ல் மீண்டும் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இங்கு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இருந்தாலும் ரூ.1,000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். திமுக, அதிமுகவுக்கு வேலூரில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வழங்குகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியுள்ளார். கூட்டணி பலமாக உள்ளது. சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அரணாக இருப்போம். அவர்கள், எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. எங்களுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு. பாமக 40 ஆண்டுகளாகப் போராடி வந்த இட ஒதுக்கீட்டை அளித்து அவர்களது போராட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகள் மட்டுமே திமுக வேட்பாளர் அதிகமாக பெற்றிருந்தார். இது பெரிய விஷயமில்லை. நமது வேட்பாளரை 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நமக்கு சாதகமாக உள்ளது.நமது வேட்பாளர் அனைத்து மக்களையும் நன்கு அறிந்தவர். அவரது வெற்றிக்கு அனைவரும் பாடுபடவேண்டும். அதிமுகவினர் தேர்தல் பணியாற்றுவதை பொறுத்துதான் அவர்களது எதிர்காலம் அமையும்’’ என்றார்.