தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.முரளி சங்கரை ஆதரித்து வந்தவாசி மற்றும் தெள்ளாரில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, “பீஹாரைச் சேர்ந்த பிராமணரை ரூ.380 கோடி கொடுத்து அழைத்து வந்து திமுக வெற்றி பெற நினைக்கிறது. அப்படியென்றால், 5 முறை ஆட்சி புரிந்த திமுகவினரிடம் எதுவும் இல்லை என்பது தெரிகிறது. எங்கள் பயிலரங்கத்துக்கு வந்தால், அதை நாங்களே சொல்லி கொடுப்போம். தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. பழனிசாமிதான் அடுத்த முதல்வர். அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பது பெண்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்து தரப்பினருக்குமான அள்ள, அள்ள குறையாத அமுத சுரபியாகும். பாமகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதமாகும். ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையோ காப்பி அடிக்கப்பட்டது ஆகும். கரோனா உலகையே ஆட்டி படைக்கிறது. இதற்கான முதற்கட்ட தடுப்பூசியை, நான் போட்டு கொண்டு விட்டேன். நீங்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது வந்தவாசி தொகுதியைத்தான் பாமக முதலில் டிக் செய்தது. இந்த தொகுதி பாமகவின் கோட்டை ஆகும். இங்கு நிறுத்தப்பட்டுள்ள பாமக வேட்பாளர் எஸ்.முரளிசங்கரும் என்னைப் போல் ஒரு போராளி. அவரை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.
இதில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.