திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, மோடி படம், பாஜக பெயரைக்கூட போடாமல் பிரச்சாரம் செய்து வருவதை திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.
துண்டுப்பிரசுரங்களில் கூட பாஜக வாசமே இல்லாமல் அவர் பிரச்சாரம் செய்து வருவதால், இது என்ன வகை கூட்டணி தர்மம்? என்று பிரச்சாரத்தில் திமுக கூட்டணியினர் கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு அதிமுக உதாசீனப்படுத்துவதாக பாஜகவினர் ஆதங்கமடைந்துள்ளனர்.
அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான விவி.ராஜன் செல்லப்பா அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் கனிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் உள்ளனர்.
தற்போது தேர்தல் பிரசசாரத்தில், பிரதமரே அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளை கடந்தும் எய்ம்ஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவை அதிமுகவிற்கு இந்த தொகுதியில் பெரும் சவாலாகவும், சிக்கலாகவும் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
அதனால், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா, தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வாசனையே வராமல் பார்த்துக் கொள்கிறார்.
தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படங்களையும், பாஜகவின் பெயரும் வராமல் பார்த்துக் கொள்கிறார்.
தற்போது அவர் தொகுதி முழுவதும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 6 சிலிண்டர்கள் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,500 உள்ளிட்ட கவர்ச்சி வாக்குறுதிகள், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை துண்டுபிரசுரமாக அச்சடித்து பொதுமக்களிடம் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் விநியோகம் செய்து வருகிறார்.
அதில், அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் படங்களையும், இரட்டை இலை சின்னமும் மட்டும் போட்டுள்ளார்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படங்களையும், பாஜக பெயரையும் போடவில்லை. சிறுபான்மையின மக்கள் வாக்குகளை கவர்வதற்காக ராஜன் செல்லப்பா, இந்த வியூகத்தை பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.
இது என்ன வகை கூட்டணி தர்மம்? என்று அவர்களை எதிர்த்து இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுதாயி தேர்தல் பிரச்சாரத்திலும், அக்கட்சி எம்பி சு.வெங்கடேசன் தன்னுடைய முகநூல் பக்கத்திலும் நியாயம் கேட்கக்கூடிய அளவிற்கு தங்களை மதுரை அதிமுகவினர் உதாசீனப்படுத்துவதாக மதுரை பாஜகவினர் ஆதங்கப்பட ஆரம்பித்துள்ளனர்.