திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
திருமங்கலம் தொகுதியில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். கட்சிக் கூட்டங்களில் பிரம்மாண்டத்தையும், வித்தியாசத்தையும் காட்டுவார்.
தற்போது தன்னுடைய பிரச்சாரத்திலும் தினமும் ஒரு வித்தியாசத்தை அரங்கேற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன், டீக்கடைக்குச் சென்று கட்சிக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் டீ போட்டுக் கொடுத்து ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து, நேற்று அவர் தன்னுடைய மகளை கிராமங்களுக்கு அனுப்பி ஆதரவு திரட்ட வைத்தார். அவர், கிராம மக்களிடம், தன்னுடைய தந்தையை தொகுதி மக்களுக்கு அர்பணிப்பத்ததாக உருக்கமாகக் கூறி வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் அருகே புளியம்பட்டி, ஜெகநாதன் பட்டி, கெஞ்சம்பட்டி, ஆதனூர், நெல்லியதேவன்பட்டி, கொல்ல வீரன்பட்டி, மங்களாம்பாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அங்குள்ள வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
புளியம்பட்டி என்ற கிராமத்தில் துவரை அறுவடை செய்து கொண்டு இருந்த விவசாயப் பெண் கூலித் தொழிலாளர்கள் காலில் விழுந்து ஆதரவு திரட்டினார்.
அப்பகுதியில் அவர் விவசாயிகள் மத்தியில் பேசுகையில், ‘‘நீங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஆகவே இந்த நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான். அதில், பெண் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உழைப்பு மிகவும் மகத்தானதாகும். வீட்டையும், காட்டையும் பார்த்துக் கொண்டு வாழும் பெண் கூலித்தொழிலாளர்கள் போற்றத்தக்கவர்கள். அவர்கள் காலில் விழுவதை பாக்கியமாக கருதுகிறேன். அவர்கள் ஆசி என்னை இந்தத் தொகுதியில் வெற்றிபெறச் செய்யும், ’’ என்றார்.