தமிழகம்

திரைப்பட இயக்குநர்கள் உடல் தானம்: முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்

செய்திப்பிரிவு

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 64 பேர் தங்கள் உடலை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தானம் செய்வதாக முதல்வர் ஜெய லலிதாவிடம் உறுதிமொழி பத்திரம் அளித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ் திரைப்பட இயக்குநர் கள் சங்கத்தலைவர் விக்ரமன், துணைத்தலைவர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேற்று காலை தலை மைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

அப்போது, இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் என 64 பேர், மரணத்துக்குப் பின் தங்கள் உடலை அரசு பொது மருத்துவமனைக்கு அளிப்பது தொடர்பான உறுதிப்பத்திரங்களை முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கி, வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் கூறியதாவது:

முதல்வரிடம் உடல் தானம் குறித்த உறுதிப்பத்திரத்தை அளித்தோம். அவரும் எங்களது இந்த முயற்சியை பாராட்டினார். தொடர்ந்து, மாவட்டம் தோறும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து உடல் தானம், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.

முதல்வரிடம் தமிழ் சினிமாவின் நூற்றாண்டுவிழாவை அடுத்தாண்டு கொண்டாடுவது குறித்து பேசினோம். மழை வெள்ள நிவாரணத்துக்கு இயக்குனர்கள் நிவாரண உதவி வழங்க உள்ளதாக கூறினோம். அதற்கு தற்போது அரசு சார்பில் நிவாரண நிதி பெறப்படவில்லை. அடுத்த வாரம் தலைமைச் செயலரை சந்தித்து நிதியை வழங்கும்படி கூறினார். நாங்கள் எங்களால் முடிந்த நிதியை திரட்டி அளிப்போம் என்றார்.

SCROLL FOR NEXT