திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட, தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.சுபாஷிடம் மனு தாக்கல் செய்த தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஆர்.கமலக்கண்ணன் 
தமிழகம்

கார்ப்பரேட் வேட்பாளர்களை பாஜக களமிறக்கியிருக்கிறது: புதுவை முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றச்சாட்டு

வீ.தமிழன்பன்

புதுச்சேரியில் கார்ப்பரேட் வேட்பாளர்களை பாஜக களமிறக்கியிருக்கிறது என முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆர்.கமலக்கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.சுபாஷிடம் இன்று (மார்ச் 19) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

''புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்து வந்த நிலையில், ஆட்சிக் காலம் நிறைவடையும் தருவாயில் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் அரசை ராஜினாமா செய்யும் சூழலுக்கு பாஜக தள்ளியது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தமது அதிகார, பண பலத்தைப் பயன்படுத்தி மிரட்டி, கட்சிக்கு இழுத்துக்கொண்டது. ஒரு வார்டில்கூட வெற்றி பெற முடியாத பாஜக இன்று புதுச்சேரியிலும், காரைக்காலிலும் கார்ப்பரேட் நபர்களை அரசியலில் இறக்கியிருக்கிறது.

நாடு முழுவதும் பாஜக கார்ப்பரேட் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. அதேபோல திருநள்ளாறு தொகுதியிலும் பாஜக சார்பில் கார்ப்பரேட் குடும்பத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராகப் பாஜக களமிறக்கியுள்ளது.

வேட்புமனுத் தாக்கலின்போதுகூட பொதுமக்கள் நலன் கருதி, கரோனா பரவல் சூழலை உணர்ந்து, அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து நாங்கள் எளிமையான முறையில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளோம். ஆனால் கார்ப்பரேட் குடும்பத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர், திருநள்ளாறு தொகுதியைச் சாராத பகுதிகளிலிருந்தும், தமிழகப் பகுதிகளிலிருந்தும் மக்களை வரவழைத்து, சாலைப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்து, அதிகார, ஆள் பலத்தை வாக்குப் பதிவுக்கு முன்பே காட்டியுள்ளார்.

40 ஆண்டுகளாக அரசியலில் ஒரு தொண்டனாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். திருநள்ளாற்றில் கடந்த 4 ஆண்டுகளாகத் தொகுதி பக்கமே வராதவர், மக்களுக்காக எதுவுமே செய்யாதவர்கள் தேர்தலில் களம் காண்கிறார்கள். மத்திய பாஜக அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.''

இவ்வாறு கமலக்கண்ணன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT