தமிழகம்

மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் கமல் பேசுகிறார்: செந்தில் பாலாஜி

செய்திப்பிரிவு

மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் கமல் பேசுகிறார் என்று செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி பேசும்போது, ”திமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்துக்குட்பட்டு கரூரில் மணல் அள்ளப்படும். மணல் குவாரி அமைக்கப்படும். 15,000 மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வருகிறார். இங்குள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு நன்கு தெரியும் ஐந்தாண்டு காலம் இந்த அரசு அவர்களை வஞ்சித்தது. மாட்டு வண்டி தொழிலாளர்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டுள்ளார். திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டவுடன் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும், இதைத் தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோ பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல் தனது ட்விட்டர் பதிவில், "தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் தொடங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.

எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாகக் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்" என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பகுதிநேர அரசியல்வாதிக்கு ஏன் கோபமும் பதற்றமும் வருகிறது என்று செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT