கரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், தேர்தல் நேரத்தில் பரவல் மையமாக மாறிவிடக்கூடாது என்பதாலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மனுவாகத் தாக்கல் செய்தால் வழக்கை எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி ஒரு முறையீட்டை வைத்தார்.
அவரது முறையீட்டில், “சில நாட்கள் கட்டுக்குள் இருந்த கரோனாவின் தாக்கம், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மதுபானக் கடைகளில் கூட்டம் சேரும். கரோனா ஹாட் ஸ்பாட்டாக அவை மாறிவிடக்கூடாது என்பதாலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடும்படி தமிழக அரசிற்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் உத்தரவிடக் கோரி வழக்கு தொடர உள்ளேன். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என முறையீட்டில் தெரிவித்தார்.
அவரது கோரிக்கையைக் கேட்ட நீதிபதிகள், மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.