தமிழகம்

நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம் என்றார் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

திருச்சிக்கு நேற்று வந்த பொன்.ராதாகிருஷ்ணனிடம், தமிழர் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநிலச் செயலாளர் ஒண்டிராஜ், இணைச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் மனு அளித்தனர். மக்களவையில் நடப்பு கூட்டத் தொடரிலேயே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத்தர வேண்டுமென அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

பின்னர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:

ஜல்லிக்கட்டு என்பது எந்த மிருகத்தையும் வதைக்கக்கூடியது அல்ல. காளைகளோடு சேர்ந்து மக்களும் விளையாடக்கூடிய வீர விளையாட்டு. தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

தமிழக பாஜக அமைப்பு தேர்தல் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும். பின்னர் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

போதிய நிதி வழங்கப்படும்

தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர், வெள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்குத் தேவையான அளவு உதவிகள் மத்திய அரசால் நிச்சயம் வழங்கப்படும். மத்திய அரசு வழங்கும் நிதியை யாரும் தவறான வழியில் பயன்படுத்த முடியாது. ஏனெனில், தற்போது தமிழக மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

எனினும், வெள்ள நிவாரணத் தொகையை பாதிக்கப் பட்டவர்களுக்கு நேரடியாக வழங்காமல், அவர்களது வங்கிக் கணக்கு மூலமாக வழங்க வேண்டுமென்பதே எனது விருப்பம் என்றார்.

SCROLL FOR NEXT