தமிழகம்

ஸ்டாலினிடம் விஷயம் இல்லை; என்னைப் பற்றி அவதூறு பேசுவதுதான் வேலை: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

செய்திப்பிரிவு

ஸ்டாலின் வேளாண் சட்டம் பற்றிப் பேசி வருகிறார். வேளாண் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தால் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக அதனை எதிர்த்துக் குரல் கொடுப்போம் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

குறிஞ்சிப்பாடியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“இந்தத் தொகுதி தற்போழுது திமுக வசம் உள்ளது. இங்குள்ள அனைவரும் இயன்ற அளவு தேர்தல் பணி ஆற்றி, அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி 24 மணி நேரமும் அவதூறு பேசுவதுதான் வேலை. அவரிடம் விஷயம் இல்லை. என்னைப் பற்றிப் பேசுவதுதான் வேலை. அரசாங்கத்தைப் பற்றிப் பேசுவதற்கு எந்தவித முகாந்தரமும் அவரிடம் இல்லை. அதனால்தான் எதையாவது பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

நான் முதல்வராக 4 வருடம் 2 மாதங்களாக இருக்கின்றேன். இந்த நீருக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கின்றேன். விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தை நிறைவேற்றினோம். அதன் மூலம் நீரைத் தேக்கிவைத்து கோடைக்காலங்களில் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வருகின்றோம். ஸ்டாலின் வாழ்ந்த வாழ்க்கை வேறு, நாம் வாழ்ந்த வாழ்க்கை வேறு. இங்குள்ள உங்களைப் போலத்தான் இன்றளவும் நானும் விவசாயம் செய்து வருகின்றேன்.

இன்றைக்கு ஸ்டாலின் வேளாண் சட்டம் பற்றிப் பேசி வருகிறார். வேளாண் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தால் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக அதனை எதிர்த்துக் குரல் கொடுப்போம். ஆனால், அங்கு வட மாநிலத்தில் இடைத்தரகர்களால் விவசாயிகள் தூண்டிவிடப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயத்தைப் பற்றியே ஸ்டாலினுக்குத் தெரியாது. அதிமுக ஆட்சியைப் பொறுத்தவரையில் விலை வீழ்ச்சி அடைகின்றபோது விவசாயி காப்பாற்றப் பட வேண்டும். அதுதான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT