மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை கோவையில் இன்று (மார்ச் 19) அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட உள்ளார். முன்னதாக, தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களைத் தன் ட்விட்டர் பக்கத்தில் கமல் பகிர்ந்திருந்தார்.
இது தொடர்பாக, கமல் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "மண், மொழி, மக்கள் காக்கும் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் கொள்கைப் பிரகடனம் இது. தலைநிமிரப் போகும் நம் தலைமுறைகளுக்கான விதை" எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அரசியல் கொள்கை பிரகடனம், மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி என்ற 5 தலைப்புகளின்கீழ் தேர்தல் அறிக்கையின் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில்,
மக்களாட்சி
* மக்களால்
* மக்களுக்காக
* மக்களுடன் மக்களோடு சேர்ந்து
அறிவார்ந்த அரசியல்
* நேர்மை
* அறிவு
* வளம்
* வளர்ச்சி
* பாதுகாப்பு
* அமைதி
சமூக நீதி
* மேடு பள்ளம் இல்லாத மேம்படுத்தப்பட்ட
* ஏழை, எளியோரின் ஏற்றம் உறுதி
* உலக தரமான கல்வி, மருத்துவம் உறுதி
* அரசு வேலைவாய்ப்பில் 69% உறுதி
* தகுதியான அனைவருக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட வேலை உறுதி
* தொழில் முனைவோர் மேம்பாடு
* வாழ்க்கை தர மேம்பாடு
* முதியோர் பாதுகாப்பு
* யாரும் அநாதை இல்லை
* வறுமைக்கோட்டில் இருந்து செழுமைக்கோடு
அரசியல் நீதி
* அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் அதிகாரம்
* வேறுபாடு களைந்த அரசியல் நீதி
* ஒற்றுமை வளர்க்கும்
* அனைத்து மக்கள் பங்களிப்பை உறுதி செய்யும்
* விவசாயிகள், தொழிலாளர்கள் அரசின் திட்டங்களில் பங்குதாரர்கள்
* தமிழ் - ஆட்சி மொழி, கல்வி ஆராய்ச்சி மொழி, நீதி மொழி, வேலை மொழி
பொருளாதார நீதி
* நிரந்தர பசுமைப் புரட்சி, நீலப்புரட்சி
* உலகளாவிய தொழில், உற்பத்தி புரட்சி
* உலகத்தோடு போட்டி போடும் தொழில் மற்றும் சேவை வளர்ச்சி
* சிந்தனை முதலீட்டால் இளைஞர்கள் தொழில்முனைவோர்
* இறக்குமதிக்கு இணையான உள்நாட்டில் ஆராய்ச்சி, உற்பத்தி
* கடனில்லா தமிழகம்/வரி குறைப்பு/ நீடித்த வளர்ச்சி/வரிக்கு நிகரான வருமானம்
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உருவாக்க
1. ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் - மக்களாட்சி.
2. விவசாயம் தொழில், உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15-20% வளர்ச்சியை உறுதி செய்து $1 ட்ரில்லியன் (ரூ.60-70 லட்சம் கோடியாக) ஆக உயர்த்துவோம். தனிநபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
3. 1-2 கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பை உறுதி செய்து, தனிநபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
4. நதி நீர் இணைப்பு, அதிதிறன் நீர்வழிச்சாலை, நீர்நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் குடிநீர் - நீலப்புரட்சி.
5. விவசாயம் - இயற்கையும் அறிவியலும் சார்ந்த நிரந்தரப் பசுமைப் புரட்சி, விவசாய பொருள்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் - ஏற்றுமதி வரை உலக சந்தைமயமாக்கல். காடுவனம் அடர்த்தியாக வளர்ப்பு.
6. மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி, ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி.
7. கிராமப்புற சுயசார்புக்கும் தொழிலுக்கும் விவசாயத்திற்கும் மதிப்புகூட்டுதல், ஏற்றுமதிக்கும் வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும் ஸ்மார்ட் வில்லேஜ் உருவாக்கத்திற்கும் - அப்துல்கலாம் புரா திட்டம்.
8. அரசு பள்ளிக்கல்வி உலகத் தரத்தில் மேம்பாடு, அடிப்படை கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைக்கல்வி 9-10 வரை சீர்திருத்தம், மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு.
9. 1.3 கோடி பேருக்கு உலகத் தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு.
10. உயர்கல்வி உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றம், உலகத்தோடு போட்டி போடும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்.
11. தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு SEET, அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவக் கல்வி, உயர் கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
12. UNO - Unorgansised to organised அனைத்து தொழிலாளர் நலவாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக மாற்றியமைத்து அவர்களுக்கு சமூக பொருளாதார அரசியல் மேம்பாடு உறுதி செய்யப்படும்.
13. சுற்றுப்புறச் சூழலுக்கேற்ற தொழில்துறை மேம்பாடு, மாசுபடுத்தும் 185 ஆலைகள் முற்றிலும் மாசில்லா ஆலைகளாக மாற்ற உறுதி செய்யப்படும்.
14. நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்க அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
15. கிராமப்புற நகர்ப்புற கட்டமைப்பு, தொழிற்சாலை எரிசக்தி, விவசாய சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை கட்டமைப்பு உலகத் தரத்தில் மேம்பாடு.
16. தமிழ் மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி, ஒரு வருடத்தில் ஆங்கில மொழிப் புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு.
17. சாதி, மத வேறுபாடில்லா மக்களாட்சி அமைப்போம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மதத்தின் பெயரால் குடியுரிமை முற்றிலும் எதிர்ப்போம். ஈழத்தமிழ் அகதிகளாக வந்தோருக்கு குடியுரிமை வலியுறுத்துவோம்.
18. மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசியல் மற்றும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நனவாக்கும் கூட்டணி அரசை மத்தியில் உருவாக்குவோம். தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுக்கு இணையான நாடாக்குவோம்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.