மதுவுடன் சில மாத்திரைகளைச் சாப்பிட்டு, அதிக போதையில் இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் விவேக் பட்டேல் (34). இவர் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ம் தேதி அதிகாலை சாந்தோம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் விவேக் பட்டேலை தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, மருத்துவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக மண்ணடி பிரதீப் (23), திருவல்லிக்கேணி கோகுல் (20), ஐஸ்அவுஸ் மனோஜ் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபடும்போது மதுபோதையில் இருந்துள்ளனர். மேலும் மருந்தகத்துக்கு சென்று சில மாத்திரைகளை வாங்கி மதுவுடன் சேர்த்து சாப்பிட்டதால் அதிக போதை ஏறி குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே மருந்தகத்தினர் இதுபோன்ற மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கொடுக்கக் கூடாது. மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தில் குற்றங்களை தடுக்கம் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது’ என்றார்.