தமிழகம்

இலங்கையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 126 பேர் தாயகம் திரும்பினர்

செய்திப்பிரிவு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 48 பேர் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்துக்கும், 78 மீனவர்கள் காரைக்காலுக்கும் நேற்று வந்தடைந்தனர்.

இலங்கை கடற்படையினர் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ராமேசுவரம் மீனவர்கள் 54 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர், நாகை மீனவர்கள் 49 பேர், தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர் என மொத்தம் 126 பேரை சிறைபிடித்தனர். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், அனுராதபுரம், நீர்க்கொழும்பு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தன. இதையடுத்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக 126 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது. அந்நாட்டு நீதிமன்றங்களால் கடந்த திங்கள்கிழமை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனிடையே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக மீனவர்களால் உடனே தமிழகத்துக்கு திரும்ப முடியவில்லை. நேற்று காலை வானிலை சீரானதும் தலைமன்னார் கடற்படை தளத்தில் இருந்து 126 தமிழக மீனவர்களும் தாயகத்துக்கு புறப்பட்டனர்.

சர்வதேச நீர்பரப்பில் இந்திய கடற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் மாலை 6 மணி அளவில் மீனவர்களை ஒப்படைத்தனர். இதில் 48 மீனவர்கள் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்துக்கும், 78 மீனவர்கள் காரைக்காலையும் வந்தடைந்தனர்.

தாயகம் திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தங்களது படகுகளை மீட்டுத் தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT