தமிழகம்

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு; புதுவையில் பள்ளிகளை தற்காலிகமாக மூட ஆளுநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை: புதிதாக 81 பேருக்கு கரோனா பாதிப்பு ஒருவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட துணைநிலை ஆளுநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

புதுச்சேரி ராஜ்நிவாசில் கரோனா தடுப்பூசி தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று இரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குநர்தான் கையெழுத்திட்ட ஒரு பரிந்து ரையை ஆளுநர் தமிழிசையிடம் அளித்துள்ளார்.

அதில், துணைநிலை ஆளுநர் கூறியபடி கரோனா தடுப்பு நடவடிக்கைகளான கரோனா பரிசோதனை, கண்டறிதல் உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆர்சி-பிசிஆர் டெஸ்ட் 70 சதவீதம், ரேபிட் கிட்டெஸ்ட் 30 சதவீதம் எடுக்கிறோம்.மருத்துவ க்கல்லூரிகள் அனைத்தும் மருத்துவ மாணவர்களை முன்களப் பணியாளர் பிரிவில் சேர்த்து கரோனா தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொற்று அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்ட முக்கிய பகுதிகளில் `காய்ச்சல் கிளினிக்குகள்’ உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிகளை தற்காலிகமாக மூட துணைநிலை ஆளுநருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கூட்டங்கள் நடக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவலியுறுத்தி வருகிறோம். மக்கள்கூடும் இடங்களில் பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசிபோடுவதற்கும் பூத்துக்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 1,353 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 62, காரைக்காலில் 12, மாஹேவில் 7 என மொத்தம் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,201 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 125, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 151 என 276 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் காரைக்கால் டிஆர் பட்டினத்தைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இறப்பு எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக ஆக உள்ளது. நேற்று புதிதாக 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

SCROLL FOR NEXT