தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தங்கத்தேர் வெள்ளோட் டம் நடந்தது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 2001-ம் ஆண்டு 168 கிலோ வெள்ளி, 16 கிலோ தங்கத்தில் தேர் தயாரிக்கப்பட்டது. இது 17.5 அடி உயரத்தில் தமிழகத்திலேயே உயரமான தங்கத்தேராக உள்ளது. தேரின் முகப்பில் 4 வெள்ளிக் குதிரைகள் பொருத்தப்பட்டு, சாரதியாக பிரம்மா அமர்ந்திருப்பார்.
2011-ம் ஆண்டு வரை தங்கத்தேரை பக்தர்கள் ரூ.2 ஆயிரம் நன்கொடை செலுத்தி ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.
தேரில் தேய்மானம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய வேண்டும் எனக் கூறி, கடந்த 10 ஆண்டுகளாக தங்கத்தேர் உலா நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் தங்கத்தேர் எப்போது தயாரிக்கப்பட்டது, கடைசியாக எப்போது வலம் வந்தது, தங்கத்தேர் உலா எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ உள்ளிட்ட விவரங்களைக் கேட்டிருந்தார்.
இதற்கு ராமேசுவரம் ராம நாதசுவாமி கோயிலின் இணை ஆணையாளர் சார்பாக அளித்த பதிலில், தேர் தயாரிக்கப்பட்ட ஆண்டு, கடைசியாக உலா வந்த ஆண்டு ஆகியவை குறித்து தகவல் அளிக்கப்பட்டது. மேலும், தங்கத்தேர் தொடர்பாக சுமார் 800 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. 20 ஆண்டுகள் பழமையான இந்த ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்தால் உதிர்ந்து விடும் நிலையில் உள்ளன. எனவே கோயில் அலுவலகத்துக்கு நேரில் வந்து தேவையான தகவல்களை பார்வையிடும்படி கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு தங்கத்தேரின் வெள்ளோட்டம் கோயில் பிரகாரத் தில் நடைபெற்றது.
தங்கத்தேர் பராமரிப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் பக்தர்கள் ரூ.4,500 செலுத்தி முன்பதிவு செய்து தங்கத் தேரை இழுத்து நேர்த்திக்கடனை செலுத் தலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.