வேலூர் மாநகராட்சியின் மெத்தன போக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சுமார் 50 டன் குப்பை 3 நாட்களாக புகை மூட்டத்துடன் எரிந்தது. அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குப்பை அகற்றும் பணியை தொடங்கினர்.
வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட சார்பனாமேடு தண்ணீர் டேங்க் அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கிடங்கில் சுமார் 50 டன் அளவுக்கும் அதிகமாக குப்பை தேங்கியுள்ளது. இந்தப் பகுதியில் சுற்றித்திரியும் மர்ம நபர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை குப்பைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பரவி முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் சுற்றியுள்ள பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.
இந்த தகவலறிந்த வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் அடங்கிய குழுவினர் சுமார்9 லோடு தண்ணீரை கொண்டு விடிய விடிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், நேற்று காலை தீ கட்டுப்படுத்தபட்ட நிலையில் குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வந்தது.
அவ்வப்போது, சில பகுதிகளில் திடீரென தீ எரிய தொடங்கியது. தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மூன்றாவது நாளாக புகைமூட்டம் இருந்துகொண்டே இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து சார்பனாமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும்மேற்பட்டோர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்த வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தனர். ஆனால், தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு மாநகராட்சிஅதிகாரிகள் வந்து உரிய தீர்வு காண வேண்டும் என்றனர்.இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்ததுடன் வரும் நாட்களில் இந்தப் பகுதியில் குப்பை கொட்ட மாட்டோம் என்றும் தற்போது ஏற்பட்டுள்ள தீயை அணைத்து இங்குள்ள குப்பை அகற்றப்படும் என்று உறுதியளித் தனர்.
இதனையேற்று போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் வண்டிகளை பயன்படுத்தி குப்பைக் கிடங்கில் தண்ணீரை ஊற்றி தேங்கி யுள்ள குப்பையை வெளியே அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
திமுக-அதிமுக வேட்பாளர்கள்
சார்பனாமேடு பகுதியில் பொது மக்கள் போராடுவதை அறிந்த வேலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்களை சந்தித்தார்.
பின்னர், அதிகாரிகளை செல் போனில் தொடர்புகொண்டு பேசியவர் புகை மூட்டத்தை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதை அறிந்த அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்புவும் போராட்டம் நடைபெற்ற சார்பனாமேடு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்ததுடன் தீயை கட்டுப்படுத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டும் பேசினார்.