ஊழலுக்கு மாற்றாக, மற்றொரு ஊழலை தேர்ந்தெடுக்காதீர்கள் என, மேட்டுப்பாளையத்தில் இன்று (18-ம் தேதி) நடந்த பரப்புரைக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், ராஜ்குமார் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (18-ம் தேதி) மாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
வாக்காளர்களாகிய நீங்கள், ஊழலுக்கு மாற்றாக மற்றொரு ஊழலை தேர்வு செய்யாதீர்கள். மாறி மாறி பொய் பேசி, ஐம்பது ஆண்டுகளாக ஆண்டவர்கள், தமிழகத்தை கெடுத்து விட்டார்கள். தங்கள் கட்சி வேட்பாளர் உட்பட தாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்யப் போகிறோம் என பேசுவதற்கு கூட துண்டு சீட்டை வைத்து கொண்டு படிக்கிறார்கள். இது ஏனென்றால் ஏற்கெனவே என்ன பொய் சொல்லியுள்ளோம் என இவர்களுக்கு நினைவில் இருக்காது. பொய் சொல்ல நிறைய ஞாபக சக்தி தேவை என்பதால், எங்கே மறதியாக எதையாவது பேசி விடுவோமா என்ற அச்சம் காரணமாகவே துண்டு சீட்டு தேவைப்படுகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி பொய் பேசுகிறார்கள்.
வருமான வரித்துறையினர் மூலம் சோதனை நடத்தி, எங்களை அச்சுறுத்த பார்க்கின்றனர். அது என்னிடம் நடக்காது. மனித - வன விலங்குகள் மோதல்கள் அதிகரித்தபடி உள்ளன.
ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. இவர்கள் மனிதர்களுக்கும் எதுவும் செய்யவில்லை, வன விலங்களுக்கும் எதுவும் செய்யவில்லை.
ஏனென்றால் கமிஷன் கிடைக்காத எதையும், இவர்கள் செய்வதில்லை. கொள்ளை கும்பலுக்கு மாற்றாக நேர்மைக்கு, மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.