தமிழகம்

அதிமுகவுக்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்குப் போடும் ஓட்டு: உதயநிதி ஸ்டாலின்

செய்திப்பிரிவு

அதிமுகவுக்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்குப் போடும் ஓட்டு என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவர் பேசும்போது, “கஜா உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் அளிக்கவில்லை. ஆனால், ரூ.8,000 கோடிக்கு சொகுசு விமானங்களை வாங்கியுள்ளது. நீட் தேர்வால் 14 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது செவிலியர் படிப்புக்கும் நீட் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீங்கள் அதிமுகவுக்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்குப் போடும் ஓட்டு. அதிமுகவுக்குப் போடும் ஓட்டு மோடிக்குப் போடும் ஓட்டு. அதிமுகவை வெற்றி பெற வைத்தீர்கள் என்றால் ஒன்று கூவத்தூர் சென்றுவிடுவார்கள் அல்லது பாஜகவுக்குச் சென்றுவிடுவார்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், இந்தத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.

SCROLL FOR NEXT