சென்னை, திருவல்லிக்கேணி பிரபல ரவுடி வீரமணியை என்கவுன்ட்டர் செய்த அதிகாரி வெள்ளைத்துரை. இவர் மனைவி ராணி ரஞ்சிதம் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடுகிறார். இதனால் ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் என ஐந்து கட்சிகள், கூட்டணிகள் களத்தில் நிற்கின்றன. இதனால் மும்முனை, நான்கு முனை, ஐந்து முனை என போட்டிக்களம் வலுவாக உள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமமுக வேட்பாளராக ராணி ரஞ்சிதம் அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனும், அதிமுக சார்பில் சில காலமே அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையாவும் போட்டியிடுகின்றனர். போட்டி கடுமையாக உள்ளது.
அமமுக வேட்பாளர் மனோரஞ்சிதத்தின் கணவர் பிரபல என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை. எஸ்.ஐ.யாகப் பணியில் இணைந்த இவர் தனது சாகசச் செயல்களால் பதவி உயர்வு பெற்று தற்போது ஏடிஎஸ்பியாக உள்ளார்.
காவல் ஆணையராக விஜயகுமாரும், இணை ஆணையராக திரிபாதியும் இருந்தபோது திருவல்லிக்கேணியின் பிரபல தாதா வீரமணியை என்கவுன்ட்டர் செய்ததன் மூலம் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார் வெள்ளைத்துரை.
பின்னர் வீரப்பன் என்கவுன்ட்டரிலும் வெள்ளைத்துரை முக்கியப் பங்காற்றினார். இலங்கைத் தமிழர் போல் நடித்து வீரப்பனை சிகிச்சைக்காகக் காட்டுக்குள் இருந்து அழைத்து வர முக்கியக் காரணமாக இருந்தவர். தொடர்ந்து மதுரையில் என்கவுன்ட்டர் எனப் புகழும் பதவி உயர்வும் பெற்ற வெள்ளைத்துரை, தற்போது நெல்லை மாவட்டத்தில் ஏடிஎஸ்பியாகப் பணியில் உள்ளார்.
இவரது மனைவி ராணி ரஞ்சிதம், திருச்சி பெரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். 2 ஆண்டுகளுக்கு முன் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். விருப்ப ஓய்வு பெற்ற ராணி ரஞ்சிதம், தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அமமுக சார்பில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மனைவி வேட்பாளர் என்பதால் காவல் அதிகாரியான கணவர் நேரடித் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது என்பதால் அவர் மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.