மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொருளாளரும் தொழிலதிபருமான சந்திரசேகர் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் லட்சுமி நகரில் பிரிட்ஜ்வே காலனியில் அனிதா டெக்ஸ்காட் எனும் பின்னலாடை மற்றும் நூல் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 17) காலை 11 மணி முதல் அவரது நிறுவனம் மற்றும் வீடுகளில் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சோதனையிட்டனர். பல மணி நேரம் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்றிரவு வரை சோதனை தொடர்ந்தது.
2-ம் நாளாக இன்றும் (மார்ச் 18) சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் நிறுவனம் மற்றும் வீடுகளில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்பது தொடர்பாக தகவல் எதுவும் வருமான வரித்துறை தரப்பில் தரப்படவில்லை.
அதேபோன்று, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதிமுக மாவட்ட துணைச் செயலாளரும், தொழிலதிபருமான கவின் நாகராஜ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கவின் நாகராஜும், சந்திரசேகரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.