சீமான்: கோப்புப்படம் 
தமிழகம்

மாநில உரிமைகளை மத்திய அரசிடம் பறி கொடுத்துவிட்ட திராவிட கட்சிகள்: சீமான் கடும் சாடல்

செய்திப்பிரிவு

மாநில தன்னாட்சி என பேசி வரும் திராவிட கட்சிகள் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் பறிகொடுத்து விட்டன என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் பகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து நேற்று (மார்ச் 17) மாலை சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், "திராவிட கட்சிகள் மாநில தன்னாட்சி என பேசி வருகின்றன. ஆனால், கல்வி இல்லை, மருத்துவம் இல்லை, எல்லா உரிமைகளையும் மத்திய அரசிடம் பறிகொடுத்துவிட்டனர். அதனால், இந்த நாடும் நாட்டு மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்றால், நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும்" என சீமான் பேசினார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாக கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT