தமிழகத்தின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் எடப்பாடியில், தொடர்ந்து இருமுறை எம்எல்ஏவாக இருக்கும் முதல்வர் பழனிசாமி, மூன்றாவது முறையும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பை தேர்தல் களம் ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி தொகுதி
விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட தொகுதியில், எடப்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டபுரம் ஆகிய பகுதிகளில் நெசவாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இருப்பாளி, வனவாசி ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை வெல்லம் உற்பத்தித் தொழில் ஈடுபட்டுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளுக்கு புகழ்பெற்ற பூலாம்பட்டி காவிரி படகுத்துறை சுற்றுலாத் தலமாக உள்ளது.
மக்களின் பிரச்சினைகள்
எடப்பாடி தொகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால், தொழிற்கல்வி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வாய்ப்பு இல்லை. படகு போக்குவரத்தை நம்பியுள்ள பூலாம்பட்டியில், காவிரியின் குறுக்கே பாலம் தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. கோவை இருகூர்- பெங்களூரு அமரகுந்தி இடையே பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிப்புத் திட்டம், விளை நிலங்களின் மீது உயர் மின் கோபுரம் அமைப்பது, ஓமலூர்-திருச்செங்கோடு இடையே அமைக்கப்படும் சாலை ஆகியவற்றுக்கு விளை நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவது, விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பினை எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதுமில்லாததும் முக்கிய பிரச்சினை.
வளர்ச்சிப் பணிகள்
மேச்சேரி - நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.158 கோடியில் நிறைவேற்றப்பட்டு, குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. 100 வறண்ட ஏரிகளுக்கு, காவிரி நீரை நிரப்பும் மேட்டூர் உபரி நீர் திட்டம் தற்போது நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளதால், எடப்பாடி தொகுதியில் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எடப்பாடியில், புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் அமைப்பு, நங்கவள்ளியில் ரூ.58 கோடியில் பாலிடெக்னிக் கல்லூரி, எட்டிக்குட்டைமேடு பகுதியில் பி.எட்., கல்லூரி, நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய ஒன்றியங்களிலும் மாதிரிப் பள்ளிகள் என கல்வி வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எடப்பாடி மேம்படுத்தப்பட்ட நவீன அரசு மருத்துவமனை, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா மினி கிளினிக் போன்றவற்றால், மருத்துவ வசதி அதிகரித்துள்ளது. எட்டிக்குட்டைமேட்டில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. தொகுதியின் அனைத்து கிராமங்களிலும் சிறப்பான சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பான்மை சமுதாயம்
எடப்பாடி தொகுதியில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், தலித்துகள், முதலியார்கள் ஆகியோரும் குறிப்பிட்டத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.
அதிமுகவின் பலம்
தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், பாசன வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள் ஏராளமானோருக்கு முதியோர் உதவித் தொகை அளிக்கப்பட்டிருப்பது, மாநில அரசுத் திட்டங்கள் பலவற்றிலும் எப்போதும் எடப்பாடி தொகுதிக்கு முன்னுரிமை கிடைத்து வந்தது போன்றவை தொகுதி மக்களைக் கவர்ந்துள்ளது.
முதல்வர் என்பதற்கான ஆடம்பரம் ஏதுமின்றி, எளிமையாக பழகும் தன்மையுடன் முதல்வர் பழனிசாமி இருந்து வருவதும் தொகுதி மக்களிடம் அவரிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வராக இருந்தபோதிலும், மாதம் இருமுறை கட்டாயம் எடப்பாடி தொகுதிக்கு வந்து, மக்களை நேரடியாக சந்திப்பது அதிமுக-வுக்கு கூடுதல் பலம். வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வன்னியர் இன மக்களின் வாக்கு வங்கி கொண்ட பாமக தற்போது அதிமுக., கூட்டணியில் இருப்பது, முதல்வர் பழனிசாமிக்கு முக்கிய பலமாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, வன்னியர் சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்தது, கூட்டுறவு சங்க பயிர்க் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி போன்றவை விவசாயம் சார்ந்த எடப்பாடி தொகுதியில் அதிமுக.வுக்கு கூடுதல் வாக்குகளை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி அறிவிப்பு, நெசவாளர் நல வாரியம், நூல் விலையைக் கட்டுக்குள் வைத்து, சரியான விலையில் நூல் கிடைக்கச் செய்யப்படும் என்பது போன்ற முதல்வரின் அறிவிப்புகள், நெசவாளர்களை அதிமுகவை நோக்கி ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.