பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, காப்பீட்டு நிறுவனஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, காப்பீட்டுத் துறை ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னையில் நேற்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரசு பொதுஇன்சூரன்ஸ் நிறுவன தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழுவின் அமைப்பாளர் ஜி.ஆனந்த் பேசியதாவது:
நாட்டின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான நேஷனல் இன்ஷூரன்ஸ், ஓரியண்டல் இன்ஷூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய 4 நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாகும். அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இவை ரூ.1.78 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளன. மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இதுவரை 10 லட்சம் கோடி பாலிசிகளை வழங்கி உள்ளன.
இந்நிலையில், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
இதைக் கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் 1995-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் இன்று (நேற்று) நாடு தழுவியஅளவில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் ஈடுபடுகின்றனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் 60 ஆயிரம்அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 5 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், அடுத்தக்கட்டமாக போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு கூறினார்.
இன்று எல்ஐசி ஊழியர்கள்
இதற்கிடையே, எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டது, பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, எல்ஐசி நிறுவன ஊழியர்கள் இன்று (18-ம் தேதி) ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.