ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடுகிறது.
ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இடம்பெற்று இருந்த ஈரோடு சட்டப்பேரவை தொகுதியில், 1957-ல் காங்கிரஸைச் சேர்ந்த மாணிக்கசுந்தரம், 1962-ல் தட்சணாமூர்த்தி ஆகியோர் எம்எல்ஏவாக இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து 1967, 1971, 1977-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 1980-க்குப் பிறகும், திமுக, அதிமுக வேட்பாளர்களே ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு, மாறி, மாறி வெற்றி பெற்று வருகின்றனர்.
காங்கிரஸைப் பொறுத்தவரை கடந்த1980-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் முத்துசாமியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் சாய்நாதன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்பு, திமுக மற்றும்அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணிஅமைத்த நிலையில், ஈரோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை. தற்போது, 40 ஆண்டுகளுக்குப் பின்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா,திமுக. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு, இத்தொகுதி ஒதுக்கப்பட்டு, அதன் வேட்பாளராக எம்.யுவராஜா போட்டியிடுகிறார்.