திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உடுமலைக்கு நேற்று வந்தார்.
கோவையில் இருந்து உடுமலைக்கு ஹெலிகாப்டரில் வந்த கமல்ஹாசன், மாலை 5 மணிக்கு தனியாருக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கினார். அங்கு அவரைக்காண நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு பிரச்சார வேனில் ஏறி, மடத்துக்குளம் கிளம்பிச் சென்றார். அங்கு போதிய கூட்டம் இல்லாததால், திறந்த வேனில் நின்றபடியே ஓரிரு நிமிடங்கள் மட்டும் வேட்பாளரை ஆதரித்துப் பேசிவிட்டு, பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.
அங்கிருந்து, உடுமலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரச்சாரத்தில் பேசுவார் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அங்கு கூட்டம் இல்லாததை அறிந்த கமல்ஹாசன், உடுமலை நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு, தாராபுரம் வழியாக ஈரோட்டுக்குச் சென்றுவிட்டார்.